×

அசாமில் இப்படியும் ஒரு ஆபத்து காண்டாமிருகங்களுக்கு எமனாகும் களைகள்: உணவை நஞ்சாக்கி உயிரை பறிக்கும்

கவுகாத்தி: அழிந்து வரும் உயிரினமான அசாம் ஒற்றை கொம்பு காண்டாமிருகங்களுக்கு வேட்டைக்காரர்கள் மட்டுமல்ல, சில ஆக்கிரமிப்பு தாவரங்களான களைகளும் எமனாகி உள்ளன. இதுபோன்ற களைகளை உடனடியாக அகற்றி, காண்டாமிருகங்களை காக்க வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். அசாம் மாநிலத்தில் உலகப் புகழ் பெற்ற காசிரங்கா தேசிய வனவிலங்குகள் சரணலாயம் அமைந்துள்ளது. யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் இடம் பெற்றுள்ள இந்த பூங்காவில் அரிய வகை விலங்கினமான ஒற்றை கொம்பு காண்டாமிருகம், புலிகள், ஆசிய யானைகள், நீர் எருமைகள், சேற்று மான்கள் ஆகியவை உயிர் வாழ்கின்றன. இந்தியாவிலேயே அசாமில் உள்ள காசிரங்கா, மனாஸ் மற்றும் போபிடோரா ஆகிய 3 வனவிலங்கு சரணாலயங்களில் மட்டுமே ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன. இவற்றின் கொம்புகளுக்கு கோடிக்கணக்கில் விலை கிடைப்பதால், சட்ட விரோதமாக இவை அதிகளவில் வேட்டையாடப்பட்டு அவற்றின் எண்ணிக்கை வெகுவாக சுருங்கி விட்டது. இந்நிலையில், வேட்டைக்காரர்கள் மட்டுமின்றி, காண்டாமிருகங்களின் வாழ்விடங்களில் முளைத்துள்ள ஆக்கிரமிப்பு தாவரங்களும் அவைகளுக்கு எமனாகி உள்ளன. காண்டாமிருகம், மான் போன்றவை புல்வெளி சார்ந்த உயிரினங்களாகும். அவற்றின் முக்கிய உணவு சத்தான பச்சை பசேல் புற்களாகும். ஆனால், காசிரங்கா, மனாஸ், போபிடோரா ஆகிய வன விலங்கு சரணாலயங்களில் புற்களுடன் ஆக்கிரமிப்பு தாவரங்கள் எனப்படும் களைகள், விஷச்செடிகள் தற்போது அதிகளவில் காணப்படுகின்றன. புற்களுடன் சேர்ந்து களைகளையும் காண்டாமிருகங்கள் உண்ணுவதால் அவற்றின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. இது குறித்து காசிரங்கா சரணாலய இயக்குநர் ஜதிந்திர சர்மா அளித்த பேட்டியில், ‘விஷத்தன்மை கொண்ட பல வகையான களைகளை நாங்கள் கண்டுள்ளோம். இவை சத்தான மூலிகைகள், புல்வெளிகளை மோசமாக பாதிக்கின்றன. சில களைகள் தண்ணீருக்கு அடியில் வளர்ந்து அவற்றில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். அந்த வகையில், பாம்பாக்ஸ் சீபா, நூர்வாலா, செஸ்ட்ரம் டைர்னம் போன்ற 18 வகையான களைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. காண்டாமிருகம் உள்ளிட்ட புல்வெளி சார்ந்த உயிரினங்களை காப்பாற்ற இவற்றை உடனடியாக அகற்ற வேண்டியது அவசியம். அதற்காக களைகளை பிடுங்குவதற்கான திட்டங்களும் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.காசிரங்கா மட்டுமின்றி மனாஸ், போபிடோரா பூங்காக்களிலும் தற்போது களைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மனாஸ் தேசிய பூங்கா அதிகாரிகள் கூறுகையில், ‘‘மனாஸில் களைகளால் 30 சதவீத புல்வெளி பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, களைகளை அகற்றுவது உடனடியாக தேவை என நாங்கள் உணர்ந்துள்ளோம்’’ என்றனர். …

The post அசாமில் இப்படியும் ஒரு ஆபத்து காண்டாமிருகங்களுக்கு எமனாகும் களைகள்: உணவை நஞ்சாக்கி உயிரை பறிக்கும் appeared first on Dinakaran.

Tags : Assam ,
× RELATED அசாமில் தொப்பை போலீஸ் பரிசோதனை: ஆகஸ்ட் 16ம் தேதி தொடக்கம்